கல்கி அவர்களின் சமூக நாவல்களில் மிகப் பிரபலமானதும், அவருக்கு சாகித்திய அகாதமி விருது வாங்கிக் கொடுத்ததுமான 'அலை ஓசை' நாவல்,முன்பொரு காலத்தில், முன்னிரவு அல்லது பின்மாலை நேரங்கள் என்று சொல்லக்கூடிய நேரங்களில் மட்டும் தமிழ் பேசிக் கொண்டிருந்த தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிய தொடர் தான். அலை ஓசை! அந்த அலை ஓசையை அதிகாலை
நேயர்களுக்கு ஒலி வடிவில் வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.
தலைப்பு 'அலையோசை' என்று இருப்பதற்குப் பதிலா அலை ஓசை என்று இரண்டு வார்த்தைப் பிரயோகம் ஏன்?. கல்கி அல்லவா! தலைப்பை நியாயப் படுத்தியிருப்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.
கல்கி அவர்களுக்கே உரித்தான பரபரப்பான திருப்பங்கள், தேன் சிந்தும் காதல் வர்ணனைகள், வசனங்கள், இயற்கை வர்ணிப்புகள்! புதினம் முழுதும் ஒரு பாலாடை போல் பரவியிருக்கிறது தேசிய உணர்வு.
சீதா, சொளந்தர ராகவன், தாரிணி, சூர்யா ஆகிய நான்கு பாத்திரங்கள், அவர்களைச் சுற்றியிருக்கும் உறவினர்கள், அவர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், அவர்களைப் பாதிக்கின்ற நாட்டின் அடிமை நிலை என்று இராஜம்பேட்டை என்ற சிறு கிராமத்தில் இருந்து, சென்னை, பம்பாய், தில்லி, ஆக்ரா, ரஜனிபூர், லாகூர் என்று கதை பரந்து விரிகையில் ரோலர் கோஸ்டரில் ஏறிப் பறக்கின்ற அனுபவத்திற்கு நாம் ஆளாவது திண்ணம்.
'சாலையின் இரு புறத்திலும் ஆலமரங்கள் சோலையாக வளர்ந்திருந்தன. ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளைப் போல் அந்தச் சாலை எங்கே ஆரம்பமாகிறது, எங்கே முடிவாகிறது என்று தெரிந்துகொள்ள முடியாதிருந்தது. பகவானுடைய விசுவரூபத்தின் அடியும், முடியும்போல், இரு திசையிலும் அடர்ந்த மரக்கிளைகளிடையில் அந்தச் சாலை மறைந்துவிட்டது.'என்று சைலஜா தன் இனிய குரலில் துவங்குகையில், நாமும் அந்தச் சாலையிலேயே நம் பயணத்தைத் துவக்குவோம். உங்களுடைய கருத்துக்களை எங்களுக்கு எழுதுங்கள். அது எங்களுக்கு இன்னும் உற்சாகமாக இன்னும் பல நாவல்களை ஒலிவடிவில் வழங்க உதவும்!
பிறந்த மண் திருவரங்கம் தற்போது கணவர் மற்றும் குடும்பத்துடன் வசிப்பது பெங்களூர்.பத்திரிகை எழுத்தாளர்.. அமுதசுரபி,
தினமலர் போன்ற அச்சிதழ்கள் நடத்திய சிறுகதை நாவல் போட்டிகளில் பரிசு பெற்றவர். விளம்பரப்படங்கள் குறும்படங்களுக்குக்குரல் தருபவர். இணைய தள குழுக்களான மரத்தடி அன்புடன்,தமிழ் உலகம் மற்றும் வலைப்பதிவர் நடத்திய கவிதை கதை கட்டுரைகளுக்குப்
பரிசு பெற்றிருக்கிறார். சிஃபி.காமில் குரல்பதிவில் படைப்புகள் தொடர்ந்து அளிப்பவர்.
பொதிகை தொலைக்காட்சியில் தற்போது சித்தர்கள்பற்றிய சிந்தனை கலந்துரையாடலில் பங்கு பெற்று வருகிறார். ஒலி எஃப் எம்மில் சில
காலம் நிகழ்ச்சிகள் தயாரித்தளித்தவர்.மற்றபடி இசை,ஓவியத்தில் ஆர்வம்கொண்ட சகலகலாவல்லி இவர்.